Tuesday, April 10, 2012

கையிலும் கருப்பையிலும்

அன்று

நான் காதலைச் சொல்லும் போது உறைந்து நின்றவள்

இன்று உறைக்கிறாள் அவள் காதலை

கையில் ஒரு குழந்தையும் கருப்பையில் ஒரு குழந்தையும் இருக்கும் போது..!

கடைசி கனவு

வாழ்வுக்கும் சாவுக்கும்
இடையில் இருந்த
கடைசி நிமிட துளிகளில்
செத்துகிடந்த ஆயிரம் கனவுகள்
ஆவிகளாய் ஆதங்கங்களாய் மருட்டின
செத்து கொண்டிருந்த கடைசி கனவு ஒன்று
உயிர் வலிக்க என்னை
உற்று பார்த்தது
பெற்று போட்டு விட்டுபேண மறுத்த தாயை பார்ப்பது போல்…
ஏகாந்தத்துக்குள் ஆயிரம் கேள்விகள் அதுகேட்க
சந்தர்ப்பங்களை சாடினேன்
சூழ்நிலைகளென சூழுரைத்தேன்
கூசாமல் பொய்யுரைத்தேன்
மானுடத்தையும் மல்லுக்கிழுத்தேன்
ஏளனச் சிரிப்பொன்றை உதிர்த்து விட்டு
மறைந்து போனது என் கடைசி கனவும்!!
கோழையாய் நானும் செத்து போவேனோ??

Monday, April 9, 2012

காதலிக்குமேல் அன்னை

பள்ளி பருவத்திலிருந்தே
செலவு செய்தால் குறைந்து விடுமோ என்று
எந்த பெண்ணிடமும் சொல்லாமல்
சேமித்த காதலை
சின்ன சிரிப்பாலும் கடைக்கண் பார்வையாலும்
மொத்தமாய் திருடி கொண்டு காதலியானாள்..
அதிகம் பேசாதவள்
நிறுத்தாமள் பேசினாள்..
நான்கே எழுத்துகள் கொண்ட என் பெயருக்குள்
நாற்பது செல்ல சுருக்கங்கள்
அவள் செய்தாள்..
ஒரு நாள் அலை கரையில்
மணல் விளையாடியபடி கேட்டாள்
"ஒரு நாளில் எத்தனை தடவை என்னை நினைப்பீர்கள்?"
"உன்னை மறந்தால் தானே நினைப்பதற்கு"
என்றேன் தொன்று தொட்டு வந்த காதலன்களை போல‌
அடுத்து கேட்டாள்
"உங்களுக்கு உங்க அம்மாவையா என்னையா அதிகம் பிடிக்கும்?"
என்று
அவளை தான் பிடிக்கும்என்று நான் சொல்வதை
எதிர்பார்த்திருப்பாள்
ஆனாலும்
"என் தாயை என்றேன்"
சின்னதாய் ஒரு சிணுக்கத்துடன்
"நான் தான் உஙகள் உலகம் என்றீர்களே?? எல்லாம் பொய்யா?? "
என்றாள்
"காதலியே... நீ என்னை காதலிக்க தகுதிகள் எனக்குண்டு
இல்லாவிடில் காதலிப்பாயா??
ஆனால்
என் முகம் அறியும் முன்னிருந்தே என்னை நேசிப்பவள் அவள்
ஆதலினாள் அவள் உன்னை விட ஒரு படி மேல் தான்"
என்றேன்.

எது காதல்

புத்தகத்து நடுவில் மயில் இறகு போல
பிரசவிக்காமலே போன
பள்ளி காதல்.
வாத பிரதிவாதம் முடிந்தும்
தீர்ப்பு எழுதாமலே
முடிந்து போன கல்லூரிகாதல்.
செவியும் உதடும்
சில இலக்கங்கள் தேய்ந்தும்
இலக்க மாற்றத்துடன்
தொலைந்து போன செல் பேசி காதல்.
மணிக்கு முன்னூறு வேகத்தில்
கைவலிக்க விசைப்பலகையை
கையாண்டும்
கண்காணாமலே போன முகப்புத்தக காதல்.
ஹோசானாவுக்காகவே
அடுத்தவீடு இளம் பெண்களிடம்
அநயாசமாய் வந்த
விண்ணை தாண்டி வருவாயா காதல்.
புது அச்சம் புன்னகை
கடனில் முழுகி சில பொன்னகை
புது மணமகளிடம்
புது வெட்கம் போல வந்த கட்டாய காதல்.
இட்லிக்கு சட்னி அரைத்துவிட்டு
வியர்வை துளிர்க்க
வேலைக்கு கணவனுடன்
மனைவியும் சேர்ந்தோடும்
சம்சா(கா)ர கடல் காதல்
ஏதோ போல மனைவி இருக்க
ஏதோ போல ஒன்று தேடும்
ஏதோ ஒரு காதல்.
எது காதல்?

காதல்வலி

தொண்டையில் முள்
புரிந்தது
தூண்டில் மீனின் வலி
சிறையில் ஒரு இரவு
புரிந்தது
கூண்டு கிளியின் வலி
பட்டினியாய் சில நாள்
புரிந்தது
எச்சை பாத்திரத்தின் வலி
செயற்கையான இயற்கை
புரிந்தது
காதலின் வலி.